இந்த சோதிடங்கள் பற்றி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது.சில சமயங்களில் புரிவதும் இல்லை.இது மொய்யா இல்லை பொய்யா என்று கூட முடிவுக்கு வர முடியவில்லை.எனக்கோ வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லை.தெரிந்துக் கொண்டால் சில சமயங்களில் மனதிற்குக் கஷ்டமாக இருக்கும்,இல்லை வாழ்க்கையில் சுவாரசியம் இல்லமால் போய்விடும்.அதுனால்தான் இந்த சோதிடத்தில் எல்லாம் எனக்குப் பெரிய ஆர்வமில்லை.இருந்தாலும் என்னையும் இந்த சோதிடம் விட்டு வைக்கவில்லை.நான் என்ன அழுகாச்சி பதிவா எழுத போகின்றேன்.இதுவும் ஒரு நகைச்சுவை பதிவுதான்.... நான் அப்படிதான் நினைக்கின்றேன்.படித்து விட்டு நீங்கள்தான் இது நகைச்சுவையா இல்லை கொடுமையா என்று சொல்ல வேண்டும்.
அப்பொழுது என் வீட்டில் வெட்டியாக இருந்த சமயம்(எப்பொழுதுதான் நீ வெட்டியாக இல்லை என்று எல்லாம் கேட்கக்கூடாது).அப்பொழுது பொழுது போகவில்லை.சரி எல்லாரும் ஊர் சுற்றலாம் என்று கிளம்பினோம்.என் கெட்ட நேரம் அங்கே யாரோ கை ரேகை ஜோசியம் பார்க்கின்றார்கள் என்று சொன்னார்கள்.மற்றவர்கள் கண்டிப்பாக கை ரேகை பார்த்தே ஆவோம் என்று அடம் பிடிக்க "சரி நீங்க எல்லாம் பாருங்கள்.நான் வேடிக்கைப் பார்க்கிறேன்"என்று நான் நழுவி விட்டேன்.
அங்கே போனால் ஒரு ஜோசியக்கார குடும்பமே இருந்தது.கணவன் மனைவி இருவருக்கும் இதுதான் முழு நேர தொழில் என்று நினைக்கின்றேன்.அவர்களுக்கு தமிழில் தாய் மொழி இல்லை என்று பேசும் தோனியிலே தெரிந்தது.வீட்டில் உள்ள எல்லாரும் கையும் அதில் உள்ள கோடுகளில் அடங்கி இருந்த மர்மத்தை எல்லாம் அந்த அம்மா புட்டு புட்டு வைத்தார்.(அது எல்லாம் எந்த அளவுக்கு உண்மை எனக்குத் தெரியவில்லை).நான் வழக்கம் போல எல்லாரையும் கிண்டல் பண்ணி கொண்டு இருந்தேன்.எனக்கும் பொழுது போக வேண்டும் இல்லையா?
"இவ ரொம்ப பேசுறா.இவ கையும் பாருங்க " என்று அம்மா மாட்டி விட..அது எல்லாம் தேவையில்லை என்று நான் நழுவ...கடைசியில் அந்த ஜோசியக்கார அம்மா என் கையைப் பிடித்து உட்கார வைத்தார்.
கையைப் பார்த்தவுடம் அந்த அம்மா சொன்ன முதல் வார்த்தை "இந்த பொண்ணு ரொம்ப கோபக்காரி".
(மக்களே உங்களில் சில புல்லறுவிகள் இது உண்மை என்று சொல்லலாம்.ஆனால் என்னைப் போல ஒரு அமைதியான பெண்ணை எங்குமே பார்த்து இருக்க மாட்டீர்கள்.அவ்வளவு அடக்கமான பெண் என்ற உண்மையை இந்த நேரத்தில் இங்கே சொல்லி கொள்கின்றேன்)
அந்த ஜோசிக்கார அம்மாதான் இப்படி என்றால்,என்னைப் பெற்ற தெய்வம் இருக்கே..என்னவென்று சொல்ல?
"ஆமா.ஆமா.சரியா சொல்லுறீங்க"என்று அம்மா ஒத்து ஊதினார்.
எனக்கோ அப்பொழுதே கோபம் பயங்கரமாக வந்தது.இந்த பொம்பளைச் சொன்னதை எல்லாம் கிண்டல் பண்ணியதற்காக நம்பளை பலி வாங்குதோ என்றுக் கூட நினைக்க தோன்றியது.
"அவ அப்பா கிட்ட கொஞ்சம் கூட பயமே இல்லை"
அதுக்கும் அம்மா ஆமாம் சாமி போட்டார்.
எனக்கு மறுபடியும் கோபம்.
"எங்க அப்பா என்ன பேயா பிசாசா பயப்பட?நான் ஏன் அவருக்குப் பயப்படனும்?அப்பா கிட்ட மரியாதை இருந்தால் போதும்ன்னு நான் நினைக்கின்றேன்.அதுதான் எங்க அப்பாவும் எதிர்ப்பார்கின்றார்"என்று பதில் சொன்னேன்.
"இந்த பொண்ணு ஒரு பயங்கரமான வாயாடி"என்று மறுபடியும் அந்த பெண்மணி என்னைத் தாக்க,நான் ஏன் இங்கே வந்தேன் என்று என்னை நானே நொந்துக் கொண்டேன்.
"வீட்டில் இவளுக்கு ரொம்ப செல்லம்.முக்கியமாக அப்பாவிடம் ரொம்ப செல்லம்.(என்ன ஒரு கண்டுப்பிடிப்பு.எப்பொழுதும் பெண் குழந்தைகள் அப்பாவிடம் தானே அதிகம் செல்லம்?!)
"அம்மாவிடம் எப்போ பார்த்தாலும் எட்டிக்கு போட்டியா வருவா."
"ஆமாங்க.சரியா சொல்லுறீங்க.என் பேச்சைக் கேக்குறதே இல்லை.சரியான நெஞ்சு அழுத்தம் புடிச்சவ."
"அம்மா இது எல்லாம் இப்போ அவங்க கேட்டாங்களா?சும்மாவே இருக்க மாட்டிங்களா என்று அதே இடத்தில் நான் அம்மாவிடம் சண்டைப் போட ஆரம்பித்தேன்.
அம்மா என்னைப் பார்த்து முறைக்க நான் வாய்யைத் திறக்கமால் இருப்பதுதான் சரி என்று அமைதியானேன்.நான் சும்மா இருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் சும்மா இல்லை.
"இவ படிப்பில் எப்படி?"
"பொண்ணு நல்ல படிப்பா.பெரிய படிப்பு எல்லாம் படிக்க வாய்ப்பு இருக்கு"
(இவங்கதான் என் வகுப்பு ஆசிரியர் மாதிரி கேள்விகள் கேட்டது இன்னும் எரிச்சலை ஊட்டியது.பரிட்சையில் எத்தனை தடவை கோழி முட்டை என்று எனக்குதானே தெரியும்.அது எல்லாம் இங்கே சொல்ல மாட்டேனே.)
"வெளிநாடு போக வாய்ப்பு இருக்கின்றதா?"
அடங்கவே மாட்டார்கள் போல் இருக்கின்றதே...இந்த பொம்பளைப் பெரிய immigration officer மாதிரி இது எல்லாம் கேட்கின்றார்களே என்று மனதிற்குள் திட்டி கொண்டேன்.
"அதுக்கு எல்லாம் பெரிய வாய்ப்பில்லை.இந்தியா போக வாய்ப்பு இருக்கு.மத்தப்படி...சிங்கப்பூரில் வேலைப் பார்க்கலாம்"
(இந்த பொம்பளைக் கிட்டதான் என்னோட passport இருக்கு போல.நான் எந்த எந்த நாட்டுக்கு போவேன் போக மாட்டேன் என்று சொல்லுறாங்களாம்.)
(க்ர்ர்ர்ர்ர்.ஒரு பெண் சிங்கத்தின் உறுமல் இது.சரி இது எல்லாம் கண்டுகாதீங்க..இதுக்கு அப்புறம்தான் பெரிய நகைச்சுவையே இருக்கு.)
"கல்யாணம் எப்படி?"
"அவளுக்கு வரப்போகும் புருசன் பெரிய காரு,automatic gate உள்ள வூடோட நல்ல வசதியானவன வருவான்"
"automatic gate இருக்குற ஆளு யாரும் எனக்கு இன்னும் தெரியவில்லையே" என்று என் கிண்டலை நான் ஆரம்பித்தேன்.
இதைக் கேட்டு என் அண்ணன் சந்தேகத்துடன் முறைக்க...
"அய்யோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை" என்று நான் கதற...
"இப்போதைக்கு இல்லை.வருங்கலத்தில் கண்டிப்பாக இருக்கும்"என்று அந்த அம்மா சொன்னார்.
அவருக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை.ஆப்பு வைப்பது எப்படி என்று அன்று கிடைத்த முதல் பாடம் இந்த அம்மாவிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.இனிமேல் ஜோசியமே பார்க்கவே கூடாது என்று அன்றோடு முடிவெடுத்தேன்.இருந்தாலும் விதி யாரை விட்டது.
சில மாதங்களுக்கு முன்பு வேலை முடிந்து வரும் வழியில் இரயில் நிலையத்தில் ஒரு இந்தியர் பயணச்சீட்டை எப்படி வாங்குவது என்று தெரியமால் தடுமாறி கொண்டிருந்தார்.என்னிடம் வந்து உதவி கேட்க நானும் சரி பயணச்சீட்டைப் பெற்றுத் தந்தேன்.(எனக்கு ரொம்ப நல்ல மனசு).
அதோடு விடமால் "தங்கச்சி உன் முஞ்சியில லட்சுமி கடாச்சம் தெரியுது" என்று ஆரம்பித்தார்.
இதை வீட்டுக்கு வந்தவுடன் என் அன்பு அண்ணனிடம் சொன்னேன்.இதைக் கேட்டு மனுசன் கிழே விழுந்து விழுந்து சிரித்தார்.இதைப் படித்து நீங்களும் விழுந்து விழுந்து சிரித்து முட்டி கால் எல்லாம் அடிப்பட்டால் நான் பொறுப்பில்லை.
என் முஞ்சியா?இந்த ஆளு ரொம்ப பொய் சொல்லுது.பேசமால் ஓடு என்று மனசாட்சி சொன்னது.மனசாட்சி சொன்னால் கேட்க வேண்டும் இல்லையா?
"ஓ அப்படியா?சரி எனக்கு நேரம் ஆகுது.நான் கிளம்புறேன்" என்று நழுவ ஆரம்பித்தேன்.
"நில்லும்மா தங்கச்சி.நீ யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டே.உனக்கு ரொம்ப நல்ல மனசு"
(அய்யோ கடவுளே மறுபடியும் இன்னொரு ஜோசிக்காரனிடம் மாட்டிக்கொண்டேனா என்று வருத்தப்பட்டேன்.என்ன ஒன்று இந்த ஆள் என்னைப் பற்றி நல்ல நல்ல பொய்களாக சொன்னார்.அந்த அம்மா மாதிரி கெட்ட பொய் சொல்லவே இல்லை)
நல்ல மனசா?அதுனால்தானே இப்படி உன்கிட்ட மாட்டிகிட்டு முழிகின்றேன் என்று மனதிற்குள் அந்த ஆசாமியைத் திட்ட ஆரம்பித்தேன்.
நான் கிளம்புறேன் என்று சொன்னால் வழியில் வந்து அந்த ஆசாமி வந்து நிற்கின்றார்.என்னைப் போக விடமால் பேசுறார் பேசுறார் பேசிக்கொண்டே இருகின்றார்.
கடைசியில் எல்லாரும் சொல்கின்ற அதே வசனத்தை இவரும் சொன்னார்.
"உனக்கு தோஷம் இருக்கு.அதை கழிக்கனும்.நான் ஒரு தாயித்து தரேன்.உன்னால் முடிந்த அளவுக்கு தட்சணை கொடு" என்று சொன்னார்.
ஒரு பிச்சைக்காரனுக்கு 10 காசு போடவே 10,000 முறை யோசிப்பேன்.இவனுக்கு பிச்சை போட்டால் இவன் சோம்பேறி ஆகிவிடுவானா என்று யோசிப்பேன்.இப்படி ஜோசியம் என்ற பெயரில் பணம் பறிக்க நினைத்தால் காசு கொடுப்பேனா என்ன?
"என் கிட்ட ஒரு காசும் இல்லை.நான் கிளம்புறேன் என்று ஒரு பதிலும் எதிர்ப்பரமால் அங்கே இருந்து ஓட்டம் பிடித்தேன்.
மறுபடியும் விதி விட்டதா?இல்லவே இல்லை.
காலையில் அதே இரயில் நிலையத்தில் மற்றோரு ஆசாமி....
"ஜோசியம் பார்க்குறீங்களா"
NOOOOOOOOOOOOOOOOOOO என்று கத்திவிட்டு அலறி அடித்து ஓடினேன்.அந்த ஆசாமியோ நான் இப்படி ஓடுவதைத் திருதிருவென்று முழித்தார்.அன்றுதான் எனக்குத் தெரிந்தது எனக்கு "astrology phobia" என்று புது வகையான பயம் இருக்கின்றது.ஹிஹி.இனிமேலும் யாரவது ஜோசியம் கை ரேகை என்று என்னிடம் வரவே கூடாது.வந்தாலும் நான் ஓடுவதை யாரலும் தடுத்து நிறுத்த முடியாது.
Thursday, July 2, 2009
சோதிடம் பார்ப்போமா?
Tuesday, June 16, 2009
கேள்வி ஒன்று ஆனால் பதிலோ.....
சும்மா இருந்த என்னை மறுபடியும் இப்படி கேள்வி எல்லாம் கேட்டு தொல்லை பண்ணுவது நல்லது இல்லை.எனக்குக் கேள்வி கேட்டால் பிடிக்காது ஏன்னா பதில் வேற சொல்லனுமே…ஆனால் அண்ணா கூப்பிட்டாரு ஆகவே எழுதிதான் ஆகனும் போல இருக்கு
எல்லாரும் என் தமிழ் கொலையை மனித்து பொறுத்து இதை படித்துக் கொள்ளுங்கள்.....
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அது ஒரு சோக கதை.என்னைப் பெற்ற தெய்வங்களுக்கு பெண் குழந்தையே இல்லை.எனக்கு முன்னால் பிறந்த எல்லாமே அண்ணன்கள் மட்டுமே.கடைசியாக வேண்டி பிறந்த ஒரே பெண் நாந்தான்.வேண்டிய கடவுளோ அம்மன்.ஆகவே அம்மன் பெயராக வைக்கனும்,அதுவும் numerlogy படி வைக்கனும்ன்னு இந்த பெயரையை வைச்சுட்டாங்க.
எனக்கு என் பெயர் எப்போவுமே பிடிச்சது இல்லை.இதற்கு காரணம் இந்த பெயரை வைச்சு கிண்டல் பண்ண ஒரு கூட்டமே இருந்தது தான்.இப்போ கூட எனக்கு இருக்குற புனைப் பெயரை எல்லாம் கேட்டால் செம கோவம் வரும்
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒரு உறவு என்னை விட்டு தள்ளி சென்ற போது…
ஒருத்தரை நம எப்போ நேசிக்கின்றோம்ன்னு தெரியுமா?அவங்க நம்பள விட்டு கொஞ்ச தூரம் தள்ளி போறங்கன்னு தெரியுற அப்போ நம்ப கண்ணுல கண்ணீர் வரும் பொழுதுதான்.எனக்கு அந்த சகோதரர் மேல இம்புட்டு கொல வெறி (பாசம்) இருக்குன்னு தெரிஞ்சது அவரு ரொம்ப தூரம் போன பிறகுதான்.இப்போ அடிக்கடி பேசிகிட்டாலும்,பக்கதுல இல்லைன்னு செம சோகம்
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு பிடிக்குதோ இல்லையோ அதை பாக்குற எல்லாருக்குமே பிடிக்கும்.அழகாக இருக்குன்னு நிறைய பேரு சொல்லி இருக்காங்க.ஆனால் எனக்கு என் கையெழுத்து சில சமயம் பிடிக்காது
4).பிடித்த மதிய உணவு என்ன?
யாராவது இலவசமாக ஏதாச்சும் வாங்கி தராது
.எது இருக்கோ அதை சத்தம் போடாமல் வாங்கி சாப்பிட்டு போகுற ஆளு நானு.நான் ஒழுங்க சாப்பிடலைன்னு என் அன்பு அண்ணன்கள் தலையில போடுவாங்க.அம்மாவும் இப்போ எல்லாம் ரொம்ப இளைச்சு போயிட்டேன்னு புலம்புறாங்க.நான் இப்போ குண்டா இருந்தேன் இப்போ இளைச்சு போகன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடுவேன்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அனைவரிடமும் நட்பாக இருக்குற பொண்ணு.இதுதான் என்கிட்ட இருக்குற பெரிய குறையும் நிறையும் கூட.இப்போ எல்லாம் நட்பு பாரட்டவே பயம்
ஆனால் இன்னும் சீக்கிரமா எல்லாரிடமும் நட்பா பேசி பழகுற பழக்கம் இருக்கு
6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
எனக்கு குளிக்கவே பிடிக்காது. 1மீட்டர் நீச்சல் குளத்துல முழுங்கி போன லூசுன்னு எல்லாருமே கிண்டல் பண்ணுவாங்க.ஆகவே இப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்து குளிக்க பயம்.ஆனால் அருவியில குளிக்க ரொம்ப பிடிக்கும்.ஆனால் பயத்துல போகவே மாட்டேன்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவங்க கால்.நான் எல்லாம் குனிந்த தலை நிமிராத தமிழ் பெண்
.ஹிஹி.எப்போவுமே அவங்க முகத்தைப் பார்ப்பேன்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் எனக்கு ரொம்ப நல்ல மனசு..அவ்வ்வ்வ் ஹிஹி.
பிடிச்ச விஷயம்ன்னா நான் சிரிச்சுட்டே இருப்பேன்.எப்போவுமே சிரிச்ச முகம்.என்னை சுற்றி உள்ளவங்களையும் ஏதாச்சும் கோமாளித்தனம் பண்ணி சிரிக்க வைப்பேன்.என்னைச் சுற்றி உள்ளவங்க யாருமே சோகமாக இருக்க கூடாது நினைப்பேன்.
பிடிக்காத விஷயம்,அதிகப்படியான விளையாட்டு புத்தி,நியாபக மறதி,ரொம்ப புலம்புறது,கவனமில்லாமை இப்படி நிறைய இருக்கு.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சாமீ யாரு அது?
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் மேல பாசமா இருக்குற நிறைய பேரு என் பக்கத்துல இல்ல
சில சமயம் அவங்க கூட போய் இருந்துடலாமன்னு தோனும்.ஆனால் 3 வருசதுக்கு இங்கே இருந்து நகர முடியாது.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீலம்
( t shirt) & skirt
(இந்த கேள்வி எல்லாம் எதுக்குன்னு யோசிக்கிறேன் :P)
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மடிக்கணியை பார்த்துட்டு வானொலி கேட்டுட்டு இருக்கேன்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
எனக்கு பேனாவாக மாற ஆசையில்லை
கத்தி கடப்பாறையாக மாற ஆசை
)
சரி போன போகட்டும்ன்னு ஒழுங்கா பதில் சொல்லுறேன்.வானவில் நிறம் கொண்ட பேனாவாக ஆசை :)
14.பிடித்த மணம்?
அம்மா சமைக்கும் மணம்
அம்மா சமைக்குறத பார்த்து ருசித்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அய்யோ.யாரையும் அழைக்க போவது இல்லை
யாரை அழைப்பது என்று தெரியவும் இல்லை
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவரு பதிவை விட அவர்கூட அடிக்கிற கும்மிதான் ரொம்ப பிடிக்கும்.எல்லாருக்கும் அவர் பதிவை பார்த்துட்டு புகழ்ந்துட்டு /திட்டிட்டு போவாங்க.நான் மட்டும் வம்பு பண்ணதான் போவேன் :D எல்லாரும் சொல்லுற மாதிரி பெரிய்ய்ய்ய்ய அறிவாளி அவரு.அவர் என்னா எழுதினாலும் ரொம்ப நல்லா இருக்கும்.ஆனா என் அறிவுக்கு எட்டாத விஷயமா இருக்கும்.அவர்கிட்ட இருந்து இன்னும் நிறைய கத்துகனும் போல இருக்கு.
17. பிடித்த விளையாட்டு?
கண்ணாமூச்சி.கடைசியா அண்ணா பசங்களோடு விளையாடிட்டு வந்தது :)
18.கண்ணாடி அணிபவரா?
ஆமா.இல்லைன்னா கண்ணு தெரியாது.அடிக்கடி காண்டெக் லென்ச் போடுவேன்.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சிரிக்க வைக்கும் படங்கள்
20.கடைசியாகப் பார்த்த படம்?
drag me to hell.மொக்கை படம்.வாந்திதான் வந்தது
21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
twilight.அண்ணா பிறந்த நாள் பரிசாக வாங்கி கொடுத்தது.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ஏதாச்சும் அழகான படம் பார்த்தால் மாற்றுவேன்.இப்போ இருக்குறது நாதஸ் எடுத்த பூக்களின் படம்
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் இசை.பிடிக்காத சத்தம் கூச்சல்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சிங்கப்பூர்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ஆமா.பேசினால் பேசிட்டே இருப்பேன்.மத்தவங்க கேக்குறாங்களா இல்லையா என்று எல்லாம் கவலை இல்லை :D
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
காதலும் கல்யாணமும்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நானே ஒரு சாத்தான்.இதுல எனக்கு உள்ள ஒரு சாத்தானா?என் அன்பு அண்ணா எல்லாம் என்னை devilன்னு செல்லமா சொல்லுவாங்க
.குறுகிய மனப்பான்மைதான் எனக்குள்ள இருக்குற பெரிய சாத்தான்னு நினைக்கிறேன் :D
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எனக்கு பிடிச்சவங்க கூட எங்கே போனாலும் ஒகே
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நல்லா இருக்கணும்னு ஆசை
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ஆண்டாவா.எனக்கு கணவன் கூட இல்லை
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கையே போர்களம் வாழ்ந்துதான் பார்க்கனும்
Monday, December 29, 2008
அரிச்சுவடியாய் நான்
வணக்கம்.இன்னும் சில தினங்களில் புத்தாண்டு தொடங்கவிருகின்றது.வருடா வருடம் என்ன கூடுகின்றதோ இல்லையோ.இந்த வயது மட்டும் கூடிக்கொண்டே போகின்றது.என் வயதைச் சொல்லவில்லை.எனது அரிச்சுவடிக்கு இன்றோடு வயது இரண்டு.ஆகவே இன்று அரிச்சுவடியின் கதையைப் பற்றி எழுத போகின்றேன்.
இந்த அரிச்சுவடி உதித்த பிண்ணனி என்ன?
சில வருடங்கள்(அதாவது இரு வருடங்களுக்கு முன்பு),
வெட்டியாக இணையத்தில் உலாவி கொண்டிருந்த பொழுது ,மா.சிவகுமார் அவர்களின் ஒரு இடுகையைக் கண்டேன்.கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் கருத்து சொல்கின்றேன் என்று மறுமொழி இட அது பார்த்து அவரும் பதில் கூற இப்படி ஆரம்பித்தது எங்கள் இணைய நட்பு.
"ஆங்கிலத்தில் பதிவு எழுதுவதற்குப் பதிலாக தமிழில் எழுதலாமே ?" என்ற அண்ணாவின் கேள்வி என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.
(மக்களே இதற்காக சிவா அண்ணாவைத் தாக்க கூடாது.அவர் மிகவும் நல்லவர் :) )
"அண்ணா தமிழ் எல்லாம் எழுதி பல வருடம் ஆகிவிட்டது.தமிழில் தட்டச்சு செய்ய கூட எனக்குத் தெரியாது.இந்த நிலமையில் எப்படி தமிழ் எழுதுவேன் ?" என்று சாக்கு போக்கு சொல்லி ஓடிவிடலாம் என்று பார்த்தேன்.ஆனால் விதி வலியது.அவரே தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிமுறைகளைக் காண்பித்து எனக்கு தமிழ் பதிவை ஆரம்பிக்க ஒரு தூண்டுகோலாக இருந்தார்.என் தமிழசிரியர் இந்த பக்கம் வர மாட்டார் என்ற நம்பிக்கையில் தமிழ் பிழைகளோடு ஆரம்பித்தது எனது தமிழ் கிறுக்கல்கள்.
அரிச்சுவடி என்று எப்படி பெயர் வைத்தேன்?இந்த கேள்வியைப் பல நண்பர்கள் கேட்டுள்ளனர்.என்ன ஒரு அழகான தமிழ் சொல் என்று பாராட்டு மழை.உண்மையை இங்கேயே சொல்லிவிடுகின்றேன். நாள் தமிழ் அகராதியைப் படித்து கொண்டிருந்த பொழுது கண்ணில் பட்ட சொல் இது.தமிழகராதியில் எண்,எழுத்தைக் கற்பிக்கும் தொடக்க பாடநூல் என்றிருந்தது,ஆஹா என்ன ஒரு அழகான சொல் என்று அப்படியே இங்கே காப்பியடித்துவிட்டேன்.எனது தமிழ் புலமை அந்த அளவிற்கு மோசமாக இருக்கும் :) பதிவு எழுதும் போது பக்கத்தில் அகாரதி இல்லாமல் எழுதியது இல்லை.அப்படி ஒரு சமயத்தில் கண்டெடுத்த சொல் அரிச்சுவடி.நான் எழுதுவதும் விடாயாங்களும்,எழுத்துக்களும் தொடக்க நிலையில் உள்ளவைகளாகதான் இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.ஆகவே அரிச்சுவடி என்ற தலைப்பு இதற்கு ஏற்றதாக அமைந்தது.
நான் எழுதும் தமிழில் பல தவறுகள் இருக்கும்.ஆனால் அந்த தவறுகளைச் சுட்டி காட்டி என்னையும் கொஞ்சம் தமிழ் கற்க வைத்த நண்பர்களுக்கு நன்றி.தமிழில் எழுதுவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் இங்கே எல்லாம் சொல்ல முடியாது.அதை விட நான் எழுதி முடித்த பின் அதில் இருக்கும் எழுத்து பிழைகளைத் திருத்தி கொடுங்கள் என்று எனது அருமை நண்பர்களை நான் படுத்து கொடுமையை இன்னும் விவரிக்க முடியாத கொடுமை :)இதற்கு எல்லாம் நிறைய நன்றி சொல்ல வேண்டி இருக்கின்றது.
தமிழ் கற்கவும் மீண்டும் சீர்மைப்படுத்தவும் ஆரம்பித்த வலைப்பதிவு,எனக்கு பல நல்ல நண்பர்களையும் பல அற்புதமான மனிதர்களையும் சந்திக்க ஒரு தளமாக அமைந்தது.எனக்கு எழுதுவதை விட இவர்களுடன் பேசி சண்டை போடுவதில் அலாதி இன்பம்.பதிவு எழுதுவதில் விட இணைய அரட்டையில் அதிக நேரம் போய் விட்டது.ஆகவே இந்த வருடமும் பதிவுகளின் எண்ணிக்கை 100+ தான் நிற்கின்றது.இந்த வருடமும் உருப்படியாக ஒன்று எழுதாத மொக்கை பதிவர் என்ற பெருமை எனக்கு சேர்கின்றது.ஹிஹிஹி..
இந்த வருடமும்,அரிச்சுவடியாய் நானும் எனது பதிவும் :)
எனது அறுவை பதிவுகளையும் அமைதியாக படித்து இரசித்த நல்லவர்களுக்கு நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நன்றி
அன்புடன்,
ஒரு அப்பாவி


